நவநாகரிகக் கலாச்சாரம் என்ற பெயரில் மது அருந்துவது ஒரு ‘ஸ்டைல்’ ஆகவும், கெத்தாகவும் பார்க்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். தமிழகம் முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு விற்பனையாகும் மதுபானங்களில் கலப்படம் செய்யப்படுவதாகவும் போலிச் சரக்குகள் விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இச்சூழலில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் தொடர் சோதனைகளை மேற்கொண்டது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இயங்கி வரும் ‘என்ரிகா எண்டர்பிரைசஸ்’ (Enrica Enterprises) நிறுவனத்தில் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில், இந்நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்களில் இயற்கை சுவைக்கு மாறாக, உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய செயற்கை சுவையூட்டும் பொருட்கள் (Artificial Flavours) சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி தடை விதித்தது.
இந்த தடையைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே. நந்தகுமார் ஐ.ஏ.எஸ் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், கிடங்குப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த 11 பிராண்டுகளின் பரிமாற்றத்தையும், சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் நடக்கும் விற்பனையையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்கள் மற்றும் ஹோட்டல்களுக்கும் இந்த மதுபானங்களை விநியோகிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ரிகா நிறுவனம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு 20-க்கும் மேற்பட்ட மது வகைகளை வழங்கி வந்த நிலையில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள 11 பிராண்டுகளின் பட்டியல் இதோ:
- விஎஸ்ஓபி எக்ஷா கோல்ட் பிராந்தி
- லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி
- மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி
- நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி
- மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி
- ஹனி பீ ஃபைன் பிராந்தி
- என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி
- என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி
- என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி
- வீரன் ஸ்பெஷல் பிராந்தி
- என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம்
முக்கிய பிராண்டுகள் பலவும் இந்த தடையில் சிக்கியிருப்பது மதுப்பிரியர்கள் மற்றும் டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
