கண்முன்னே நடந்த கோர விபத்து… ரயிலில் சிக்கி 2 பெண் பணியாளர்கள் பலி…. கோவையில் பதறவைக்கும் துயரம்….!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. துடியலூர் பகுதியைச் சேர்ந்த யசோதா (24) மற்றும் ஊட்டியைச் சேர்ந்த கவிதா (43) ஆகிய இரு ஒப்பந்தத் தொழிலாளர்களே இந்த விபத்தில் பலியானவர்கள் ஆவர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ரயில்வே தண்டவாளங்கள் போன்ற மிக அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்காள்ளும்போது, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தகுந்த மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தூரத்தில் வரும் ரயில்களை எச்சரிக்க சிவப்புக் கொடிகள் மற்றும் பணியாளர்களை அடையாளம் காண பாதுகாப்புச் சட்டைகள் வழங்கப்படுவது அடிப்படை விதியாகும். ஆனால், எவ்வித பாதுகாப்புக் கருவிகளுமின்றியும், எச்சரிக்க மேற்பார்வையாளரைக் கூட நியமிக்காமலும் இரு பெண்களையும் ஆபத்தான பணியில் அமர்த்தியதே இந்த கொடூர விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

   

ஒப்பந்ததாரரின் இந்த அலட்சியப் போக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உயிர்பலிக்குக் காரணமான சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது எனத் தூய்மைப் பணியாளர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

   

சொற்ப ஊதியத்திற்காக ஆபத்தான சூழலில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே, பலியான பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்குவதோடு, அலட்சியமாகச் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.