சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், தனது உடல்நலக் குறைவு காரணமாக மகள் திருநிறைச்செல்வியுடன் ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில் எல்லையம்மன் கோயில் அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று இவர்களது வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த திருநிறைச்செல்வியின் தலையில் லாரியின் சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தந்தை, தனது கண்முன்னேயே ரத்த வெள்ளத்தில் மகள் உயிரிழந்ததைக் கண்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியது.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த திருவொற்றியூர் போக்குவரத்து காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விபத்தில் பலியான திருநிறைச்செல்விக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், இன்னும் மூன்று மாதங்களில் திருமணமும் முடிவாகியிருந்தது. மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகளைப் பிணமாகப் பார்த்து தந்தை கதறியழுததும், திருமணக் கனவில் இருந்த இளம்பெண் பரிதாபமாகப் பலியானதும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
