தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, விபத்து நடந்த பகுதி 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்தால், தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு கட்டாயம் சென்றடைய வேண்டும். இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி விபத்து பகுதிக்குச் செல்ல தாமதமானால், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர அழைப்புகளைக் கையாள்வதிலும் புறப்படுவதிலும் மிகக் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதவி கோரி வரும் தொலைபேசி அழைப்புகளை ஒரு நிமிடத்திற்குள் ஏற்கத் தவறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, அழைப்பை ஏற்ற இரண்டு நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கிருந்து புறப்பட வேண்டும்; இதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்பதோடு மட்டுமின்றி, தகவல் பெறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அவர்களை மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்க வேண்டியதும் அவசியமாகும்; இதனைச் செய்யத் தவறினாலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களில் போதிய உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள், தகுதியுடைய ஓட்டுநர் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் இல்லாவிட்டாலும் இதே பத்தாயிரம் ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டி வரும் என நெடுஞ்சாலை ஆணையம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
