அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தொடர்பான ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திடும் நிகழ்வு சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது அவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு பெண், எதிர்பாராத விதமாக இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ட்ரம்பிற்குப் பின்னால் நின்றிருந்த அந்தப் பெண், தனது ஒரு கையை வயிற்றின் அருகே வைத்தபடி தொடர்ந்து தலையசைத்துக் கொண்டிருந்தார். அவர் பெயர் ஜெய்மி லீ ஃபிராங்க்ளின். இவர் ஒரு பழமைவாத ஊடக நிர்வாகியும், முன்னாள் ட்ரம்ப் நிர்வாக ஊழியரும் ஆவார்.
அவர் தனது கையை வயிற்றின் மீது வைத்திருந்ததைப் பார்த்த நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் ஒரு விசித்திரமான வதந்தியைப் பரவவிட்டனர். அதாவது, ட்ரம்பின் கவனம் சிதறாமல் விழிப்போடு இருப்பதற்காக, ஃபிராங்க்ளின் தனது கையில் ஏதோ ஒரு ரகசிய கருவியை மறைத்து வைத்து, அதன் மூலம் ட்ரம்புக்கு அடிக்கடி ‘மின்சார அதிர்ச்சி’ கொடுக்கிறார் என்று நெட்டிசன்கள் கேலியாகக் கூறத் தொடங்கினர். எந்தவித ஆதாரமும் இல்லாத இந்த விசித்திரக் கற்பனைக் கதை, சமூக வலைத்தளங்களில் மீம்களாக மாறி மிக வேகமாக வைரலானது.
https://twitter.com/krassenstein/status/2086900322149048588/video/1
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஃபிராங்க்ளின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நேரடியாகப் பதிலளித்தார். வதந்தி பரப்பியவர்களைப் பார்த்து “நான் கர்ப்பமாக இருக்கிறேன், விசித்திரமானவர்களே” என்று கூறி, கர்ப்பமாக இருப்பதால் இயல்பாகவே தனது கையை வயிற்றின் மீது வைத்திருந்ததாக அவர் விளக்கமளித்தார். ‘தி கன்சர்வேடர்’ என்ற ஊடக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அவர், அதிபர் ட்ரம்புடன் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டது தமக்கு மிகவும் பெருமையளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
