ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளதுடன், அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது எல்லைப் பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் அண்மையில் கடிதம் எழுதியிருந்த நிலையில், மீண்டும் இந்த கைது நடவடிக்கை தொடர்வது மீனவர் குடும்பங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இலங்கை கடற்படையின் இந்தத் தொடர் கெடுபிடிகளைத் தடுத்து நிறுத்தவும் முதல்வர் உடனடியாகத் தலையிட்டு வலுவான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எல்லைப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
