பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், வாடகை வீடு தேடிச் சென்ற தம்பதியினர் மீது பிட்புல் ரக நாய் கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தங்குவதற்கு இடம் தேடிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த பிட்புல் நாய் அவர்களை நோக்கிப் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது.
சுமார் 65 வினாடிகளுக்கு மேலாக அந்த பிட்புல் நாய் தம்பதியினரைத் தொடர்ந்து கடித்துக் குதறியது. நாயிடமிருந்து தப்பிக்க அவர்கள் கடுமையாகப் போராடிய போதிலும், அது அவர்களை விடாமல் மீண்டும் மீண்டும் தாக்கியது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரைக் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து பலத்த போராட்டத்திற்குப் பிறகே நாயைக் கட்டுப்படுத்தி, தம்பதியினரை மீட்டனர். நாய்க்கடியில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் ஆபத்தான நாய் வகைகளை வளர்ப்பது மற்றும் அவற்றுக்கான பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவது குறித்த விவாதத்தை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
