மாநகர காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 வகை உரிமம் பெற்ற சுமார் 230 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்களுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபானக் கூடங்களை இயக்குவது, எல்லை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது மற்றும் உணவுப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் குறித்து தொடர் புகார்கள் வந்த நிலையில் இக்கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஆணையர், எக்காரணம் கொண்டும் காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்கக் கூடாது என்றும், மீறி லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்கள் இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் எவ்விதத் தாட்சணியமுமின்றி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஒரு முன்னோடி நடவடிக்கையாக, உரிமையாளர்களுடன் ஆணையர் நேரடியாக உரையாடுவதற்கு முன்பாக அரங்கத்தில் இருந்த கீழ்நிலை காவல் அதிகாரிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறையினரின் எவ்வித அழுத்தமும் அச்சமுமின்றி, பார் உரிமையாளர்கள் தங்கள் தரப்புப் பிரச்சினைகளையும் கருத்துகளையும் சுதந்திரமாக எடுத்துரைக்கவும், நேரடி வழிகாட்டுதல்களைப் பெறவும் இந்த நடவடிக்கை பெரிதும் வழிவகுத்தது. நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் சட்டவிரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆணையர் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை, தற்போது காவல்துறை மற்றும் மதுபானக் கூட உரிமையாளர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
