தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சிட்கோ இணையதளத்தில் தவறுதலாகப் பதிவேற்றப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டாக்டர் அகிதா சிங் – டைரக்டர் ஆஃப் இந்தியா’ என்ற உயர்மட்ட அரசு அதிகாரியின் பெயருக்கு நேராக, அதிகாரிக்குப் பதிலாக நடிகை ரச்சிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதை நவீன் மணிகண்டன் என்பவர் எக்ஸ் பக்கத்தில் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே இத்தகைய தவறு நடந்திருப்பதைப் பார்த்த நெட்டிசன்களும், ரச்சிதாவின் ரசிகர்களும் இந்தச் சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர். “இணையதளத்தை டிசைன் செய்தவர் நிச்சயமாக ரச்சிதாவின் தீவிர ரசிகராகத்தான் இருக்க வேண்டும்; வேலை நேரத்தில் நடிகையின் போட்டோவைப் பார்த்துவிட்டு மாற்றி வைத்துவிட்டார்கள் போல” எனப் பலரும் நகைச்சுவையாக மீம்ஸ்களைப் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரசுத் துறை சார்ந்த இணையதளங்களில் தகவல் பாதுகாப்பு மற்றும் துல்லியம் மிகவும் அவசியம் எனும் சூழலில், சிட்கோ இணையதளத்தின் இந்த அலட்சியமான தவறு தற்போது இணையத்தில் காரசாரமாகவும், அதே சமயம் காமெடியாகவும் விவாதிக்கப்பட்டு வரும் சுவாரசியமான செய்தியாக மாறியுள்ளது.
