தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்படும் காரசாரமான மோதல்களைத் தணித்து, இருதரப்புக்கும் பாலம் அமைக்கும் மத்தியஸ்தராக எப்போதும் ஒரு தலைவர் உருவெடுப்பது வழக்கம். கடந்த காலத்தில் கருணாநிதி – ஜெயலலிதா இடையிலான கடும் அரசியல் மோதல்களின் போது, சசிகலா பின்னணியில் இருந்து உறவுப் பாலமாகச் செயல்பட்டதைப் போல, தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் எ.வ.வேலு அந்த இடத்தை வகிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் தவெக – திமுக இடையே எழுந்த காரசாரமான விவாதங்களாகட்டும், அல்லது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரங்கேறிய அரசியல் நகர்வுகளாகட்டும், சூழலின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு எ.வ.வேலு சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, உதயநிதி – ஆதவ் அர்ஜுனா இடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் மரிய வில்சன் – ஜே.டி.ராஜேந்திரன் இடையிலான மோதல்கள் எழுந்தபோதும், இருதரப்பையும் நேரில் அழைத்துச் சமாதானம் செய்து காரியத்தைச் சாதித்ததில் இவரது ராஜதந்திர நகர்வுகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
