பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், நரம்புப் பிரச்சனை காரணமாக தனது முந்தைய பணியை விட்டு விலகி, கடந்த 7 மாதங்களாக வேலையின்றி இருந்துள்ளார். அந்த இடைவெளியைப் பயன்படுத்தித் தனது திறன்களை வளர்த்துக் கொண்ட அவர், புதிய வேலைக்காகத் தீவிரமாக விண்ணப்பிக்கத் தொடங்கினார். பல நிறுவனங்களில் தொடர் நிராகரிப்புகள், நூற்றுக்கணக்கான எச்.ஆர் அழைப்புகள் மற்றும் 36 கடினமான தொழில்நுட்ப நேர்காணல்களைச் சந்தித்த பின்னரே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இறுதியாக, ஹைதராபாத்தில் உள்ள அல்கோலீப் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளத்தில் SDE-3 பணியிடத்திற்கான வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். பெரிய அளவிலான சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்றாலும், 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்தைக் காப்பாற்றும் சூழல் அமைந்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், “இன்டர்வியூவில் தோற்றாலும் முயற்சியைக் கைவிடாமல் அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என வேலை தேடும் பிற இளைஞர்களுக்கு அவர் இணையம் வாயிலாக நம்பிக்கையளித்துள்ளார்.
