“மீண்டும் வருவோம் ரூ.80 லட்சம் ரெடியா வைங்க!”… ஆதாரமே இல்லாமல் தப்பிய கில்லாடி திருடர்கள்…வழக்கறிஞரை உலுக்கிய பயங்கர இரவு…!!

By Gayathri on ஆவணி 9, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில் வசித்து வரும் மூத்த வழக்கறிஞரான பல்வந்த் சிங் வாலியா, தனது வீட்டில் வளர்க்கும் நாயுடன் இரவு நடைபயிற்சி முடித்துவிட்டு திரும்பியபோது பெரும் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை மர்ம நபர்கள் கயிறு மற்றும் டேப் மூலம் கட்டிப்போட்டிருந்தனர். அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த நான்கு நபர்கள், வழக்கறிஞரையும் சரமாரியாகத் தாக்கி கட்டிப்போட்டதோடு, முதிய தம்பதியினரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

இந்த பயங்கரச் சம்பவத்தின் போது, கடந்த மார்ச் மாதம் இதே வீட்டில் 50 லட்சம் ரூபாயை திருடியதும் தாங்கள்தான் என அந்த கும்பல் அதிர்ச்சி தகவலை தம்பதியிடம் வெளியிட்டது. முந்தைய திருட்டின்போது திறக்க முடியாத டிஜிட்டல் லாக்கர்களை தற்போது திறக்கக் கோரி, துப்பாக்கி முனையில் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். உயிருக்கு பயந்த வழக்கறிஞர் லாக்கரைத் திறந்ததும், அதிலிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் வரையிலான ரொக்கப் பணம், கிலோ கணக்கிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி ஆகியவற்றை அந்த கும்பல் சுருட்டிக்கொண்டது.

   

தப்பியோடும் முன், வீட்டின் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கிய கொள்ளையர்கள், தடையங்களை மறைக்க அதன் டிவிஆர் கருவியையும் தங்களோடு எடுத்துச் சென்றனர். மேலும், தங்களுக்கு இன்னும் 80 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும், அதைத் தயார் நிலையில் வைக்காவிட்டால் மீண்டும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டிவிட்டு வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுத் தப்பினர். பின்னர் தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். இது குறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதோடு, வழக்கறிஞரின் இல்லத்திற்குப் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.