“அமைச்சர் பதவி தர்றோம்னு சொன்னாங்க”…. வைகோ கொடுத்த ஆசை வார்த்தை… உடைத்து எறிந்த 2 எம்.எல்.ஏ-க்கள்…. அறிவாலயத்தில் திடீர் பரபரப்பு…..!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ-க்களான கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி செந்தில் செல்வன் ஆகியோர், தங்களை பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிர்ப்பந்தித்ததாக பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், “ஆளும் கட்சி கூட்டணியில் இணைகிறோம், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும், அமைச்சராகக் கூட ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்த விரும்பாமல் அந்த ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற புதிதில், திமுக கொறடாவின் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்திய வைகோ, கடந்த ஜூன் 16-ஆம் தேதி தமிழக அமைச்சர் ஒருவரைச் சந்தித்த பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக எம்.எல்.ஏ-க்கள் குறிப்பிட்டனர். தொகுதி மக்களும் கட்சி அமைப்பினரும் ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதை வைகோவிடம் எடுத்துரைத்தும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கடந்த 38 நாட்களாகத் தாங்கள் அமைதி காத்து வந்த நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “எம்.எல்.ஏ-க்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பே விலை போய்விட்டார்கள்” என்று அவதூறு பரப்பியது தங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

   

கடந்த 40 ஆண்டுகளாக எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் வைகோவுடன் பயணித்த தங்களுக்கு, இன்று இழிவான பழிச்சொல் மட்டுமே மிஞ்சியிருப்பதாக மனமுறுகிய எம்.எல்.ஏ-க்கள், இனி வரும் காலங்களில் திமுக உறுப்பினர்களாகவேத் தொடர்ந்து பயணிப்போம் எனப் பிரகடனப்படுத்தியுள்ளனர். சிறிய வயது முதலே தாங்கள் நேசித்த கம்பீரமான திமுகவில் தொடர்ந்து பயணிப்பதுடன், ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளதாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கவும் திராவிடக் கொள்கைகள் மண்ணில் தழைக்கவும் உண்மைச் சிப்பாய்களாகக் களத்தில் நின்று பணியாற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

   

தங்களை நம்பி வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மனநிறைவுடன் மக்கள் பணியைத் தொடரப் போவதாகக் கூறிய அவர்கள், தம்மை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திய மதிமுக தலைவர் வைகோவிற்கும், கண்ணியமும் அன்பும் நிறைந்த மதிமுக நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாகக் கூட்டணி அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.