அடடே… ஆவின் கொடுத்த மாஸ் சர்ப்ரைஸ்… இனி வெறும் ரூ.12க்கு கிடைக்கும்… மொறுமொறு ஆவின் மில்க் ரஸ்க்… எப்போ வாங்கப்போறீங்க?…

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்த 1958-இல் பால் வளர்ச்சித் துறையும், 1972-இல் பால் வளர்ச்சிக் கழகமும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, பிப்ரவரி 1, 1981 அன்று தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் உருவாக்கப்பட்டு, “ஆவின்” என்ற வர்த்தகப் பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யத் தொடங்கின. சென்னை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆவின், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்து, தரப்பரிசோதனை மற்றும் பதப்படுத்துதல் மூலம் நுகர்வோருக்கு வழங்கி, உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

ஆவின் நிறுவனம் டோன்டு பால், ஃபுல் க்ரீம் பால் போன்ற பால் வகைகளுடன் நெய், வெண்ணெய், தயிர், மோர், பன்னீர், சீஸ், பால்கோவா, மைசூர்பா, ஐஸ்கிரீம் மற்றும் பாதாம் பால் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை வெற்றிகரமாக விற்பனை செய்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு நெய் இனிப்புகளை அறிமுகப்படுத்துவதுடன், சமீபத்தில் மாவட்டங்களின் பாரம்பரிய இனிப்புகளையும் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

   

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலுடன் ரஸ்க் சாப்பிடும் வழக்கத்தை மனதில்கொண்டு, ஆவின் நிறுவனம் “ஆவின் மில்க் ரஸ்க்” என்ற புதிய மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆவின் பால் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த மொறுமொறுப்பான ரஸ்க் 100 கிராம் ரூ 20 என்றும், 60 கிராம் ரூ 12 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய அறிமுகம் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் அனைவராலும் வரவேற்கப்படும் ஒரு ஸ்நாக்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.