உஷார் மக்களே… இனி கரண்ட் பில் கட்டலனா… மெசேஜ் மட்டும்தான் வரும்… மின் இணைப்பு நிரந்தரமா கட்… மின்சார வாரியம் வைத்த செக்…!

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

தமிழ்நாடு மின்சார வாரியம் நீண்ட காலமாக மின்சாரக் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளைத் தானியங்கி முறையில் நிரந்தரமாகத் துண்டிக்கும் புதிய நடைமுறையை ஜூலை 1 முதல் அமல்படுத்தியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், அக்டோபர் 2025 முதல் துண்டிக்கப்பட்ட குறைந்த மின்னழுத்த இணைப்புகளுக்குப் பொருந்தும். இனி ஆறு மாதங்களுக்கும் மேலாகக் கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்குக் காகித வடிவிலான அறிவிப்பு வழங்கப்படாது; அதற்குப் பதிலாக எஸ்.எம்.எஸ். மூலம் மட்டுமே தானியங்கி முறையில் எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்படும்.

புதிய விதிகளின்படி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிப்பு வழங்கப்படும். அந்த அறிவிப்பு வந்த பின்னரும் அடுத்த 90 நாட்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறினாலோ அல்லது இணைப்பைப் புதுப்பிக்கத் தவறினாலோ, அந்த மின் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படும். தற்போது மீட்டர் கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் தற்காலிகமாக சேவை துண்டிக்கப்படும் நிலையில், நிலுவைக் கணக்குகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர மின்வாரியப் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்குக் கடுமையான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

   

இந்தத் தானியங்கி நடைமுறை குறித்து நுகர்வோர் நல ஆர்வலர்களும் ஓய்வுபெற்ற அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். மின் இணைப்பு களத்தில் நேரடியாகத் துண்டிக்கப்படுமா அல்லது பதிவேட்டில் மட்டும் துண்டிக்கப்படுமா என்ற தெளிவின்மை உள்ளதாகவும், களத்தில் துண்டிக்கப்படாமல் நுகர்வோர் அறியாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது மின் திருட்டு வழக்கு மற்றும் அபராதம் விதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வைப்புத்தொகையைத் திரும்பப் பெற இன்னமும் நேரடி மனுக்கள் தேவைப்படுவதை ஓய்வுபெற்ற அதிகாரி நீலகண்ட பிள்ளை கேள்வி எழுப்பியதற்கு, 2022 திருத்தப்பட்ட விதிகளின்படியே இது செயல்படுத்தப்படுவதாகவும், வைப்புத்தொகை திரும்பப் பெறும் முறையும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் மின்சார வாரியம் பதிலளித்துள்ளது.