பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்ய வந்த ஊழியர், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு வாங்கியுள்ளார். அந்தப் பெண்ணும் பாட்டிலை அவரிடமே வைத்துக்கொள்ளுமாறு வழங்கிய நிலையில், தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் வந்த அந்த ஊழியர், மேலும் ஒரு பாட்டில் தண்ணீர் கேட்டதுடன், சில நிமிடங்கள் வீட்டிற்குள் வர அனுமதிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அந்தப் பெண் அதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து கதவை மூட முயன்றபோதிலும், அந்த ஊழியர் தொடர்ச்சியாகக் காலிங் பெல்லை அழுத்தியும் கதவைத் தட்டியும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அப்பெண் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு, இச்சம்பவம் குறித்தும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை குறித்தும் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்டுத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவனமானது அந்த ஊழியரைப் பணியிலிருந்து உடனடியாக நீக்கியதுடன், மீண்டும் அந்தப் பகுதிக்கே செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. பெங்களூரில் டெலிவரி ஊழியர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை குறித்து இச்சம்பவம் மீண்டும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
