“10 கோடி வசூல்… ஸ்கார்பியோ கார் கிஃப்ட்”…. விஜயபாஸ்கர் மீது அதிமுக வெடி குண்டு புகார்….. தமிழக அரசியல் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்த திமுக – அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக் குறுகிய காலத்தில் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது. இக்கட்சியின் வளர்ச்சியால் ஏற்பட்ட அரசியல் நகர்வுகளின் விளைவாக, அதிமுகவில் உள்முரண்பாடுகள் வெடித்து, அக்கட்சி பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன்பலனாக, அதிமுகவின் முன்னணி தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான ஆதரவு அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தவெகவிற்கு ஆதரவளித்து, பின்னணியில் அக்கட்சியில் இணையத் தொடங்கினர்.

இந்த அரசியல் மாற்றத்தின் முக்கிய அங்கமாக, அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார். மீண்டும் விராலிமலை தொகுதியை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கியுள்ள அவர், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் தவெகவின் அமைப்பை வலுப்படுத்தித் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தொகுதிக்குட்பட்ட பகுதியில் தவெக நிர்வாகிகளுக்கு அறிமுகக் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தியுள்ளதோடு, அதன் முழு செலவையும் ஏற்பதாகவும், சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யும் நிர்வாகிகளுக்கு விலையுயர்ந்த ‘ஸ்கார்பியோ’ கார்களை வழங்கி கௌரவிப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இந்த நகர்வுகளுக்கு எதிராக அதிமுக தரப்பில் இருந்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலாளர் பழனிவேல், கடந்த தேர்தல்களின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர்களிடம் இருந்து விஜயபாஸ்கர் பெருந்தொகையை வசூலித்ததாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். குறிப்பாக, ஆலங்குடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க விமல் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது உட்பட, மாவட்டம் முழுவதிலும் சுமார் ரூ.10 கோடி வரை அவர் வசூல் செய்ததாக பழனிவேல் அடுக்கடுக்கான புகார்களைக் முன்வைத்தார்.

   

தொடர்ந்து பேசிய அதிமுக நிர்வாகிகள், “தற்போது தவெகவில் இணைந்துள்ள விஜயபாஸ்கர், அங்குள்ள நிர்வாகிகளுக்கு ஸ்கார்பியோ கார் பரிசளிப்பது மற்றும் கறி விருந்துகள் வைப்பது போன்ற ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்தும் இந்த பல கோடி ரூபாய் பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது?” எனக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் தடம் பதிக்கும் மூத்த தலைவர்கள் மீது முன்வைக்கப்படும் இத்தகைய சொத்து மற்றும் பணப் புகார்கள், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் காரசார விவாதத்தை உருவாக்கியுள்ளன.