ஈரோடு பாரதி நகரைச் சேர்ந்த 24 வயதான வினோதினி என்ற திருமணமான பெண்ணிற்கு, சமூக வலைதளம் மூலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்தி, இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை வினோதினியின் கணவருக்கு அனுப்பி நவநீதகிருஷ்ணன் தொந்தரவு செய்ததால், கணவர் அவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்பின்னர் நவநீதகிருஷ்ணனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்த வினோதினி, தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வினோதினியின் வீட்டிற்குச் சென்ற நவநீதகிருஷ்ணன், அவருடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென வினோதினி மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் வினோதினி உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தீக்காயங்களுடன் தப்பிய நவநீதகிருஷ்ணன் கரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மரணமடைவதற்கு முன் நீதிபதியிடம் வினோதினி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஈரோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
