திமுக ஆட்சிக் காலத்தில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் அரசு வருவாய் தனியாருக்குத் திருப்பப்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகள், தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன. டாஸ்மாக் மற்றும் மின்சாரத் துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், நீர்வளத்துறையிலும் இதே பாணியில் கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. பராமரிப்புப் பணிகள் மற்றும் டெண்டர்கள் என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதை அதிகாரிகளே கையாடல் செய்ததாக எழுந்த புகார்களை அடுத்து, விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் அலுவலகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
துறையின் புதிய செயலாளராக சத்தியபிரதா சாஹூ பொறுப்பேற்ற பிறகு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகள் மீது சவுக்குடி விழுந்துள்ளது. சென்னை தலைமைப் பொறியாளர் பொதுப்பணி திலகம், கண்காணிப்புப் பொறியாளர் செல்வகுமார் மற்றும் உதவிச் செயற்பொறியாளர் மகேந்திரகுமார் உள்ளிட்டோரின் முக்கியப் பொறுப்புகள் உடனடியாகப் பறிக்கப்பட்டு, அவர்கள் வேறு இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது சொத்து விவரங்கள் மற்றும் கடந்த ஆட்சியில் இவர்கள் மேற்கொண்ட பண ஒதுக்கீடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இழப்பைச் சரிசெய்ய மணல் மாஃபியாக்களின் துணையோடு மீண்டும் முக்கியப் பொறுப்புகளுக்கு வர இந்த அதிகாரிப் பட்டாளம் தீவிர முயற்களை மேற்கொண்டு வருகிறது.
நீர்வளத்துறையில் நிகழ்ந்த இந்த மாபெரும் கையாடலில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் உமாபதி, பொதுப்பணி திலகம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதன்மை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ‘மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்’ என்று ஒப்பந்ததாரர்கள் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்களை மிரட்டி, இவர்கள் பெருந்தொகையை வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முறையற்ற பணியிட மாறுதல் மற்றும் ‘அய்யா கலாச்சாரம்’ என்ற பெயரில் நடந்த லஞ்ச நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தகுதியான அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் தற்போதைய வெளிப்படையான நடவடிக்கைகள் அரசுப் பொறியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ. 342 கோடி மதிப்பில் அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்ட ‘மாமல்லன் நீர் தேக்கத் திட்டத்தில்’ மாபெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. மீனவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, உவர்நீர் நிலத்தில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டதில் தேர்தல் காலத்தில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. இத்திட்டம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆழமாக விசாரணை நடத்தினாலே, துறையின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் மற்றும் ‘பெரிய மீன்கள்’ அனைத்தும் சட்டத்தின் முன் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
