விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 வயது சிறுமியை அடித்துத் துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கல்லறை தெருவைச் சேர்ந்த ஜெகநாதனுக்கும், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நந்தினிக்கு ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து அக்குழந்தையைத் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் அழுகை மற்றும் கதறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்று நாடகமாடி, ஜெகநாதனும் நந்தினியும் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் உடலில் இருந்த பல்வேறு காயங்களைக் கண்ட மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையே, மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தலைமறைவாகினர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியிருந்த நந்தினி மற்றும் ஜெகநாதன் இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், நரபலி கொடுக்க முயன்றார்களா என்ற கோணத்திலேயும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை மேற்கொண்டு வருவதால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
