தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்கவும், நிதி மேலாண்மையைச் சீரமைக்கவும் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு வருவாய் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதும், அதிகரித்து வரும் கடன் சுமையைக் குறைப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கம் ஆகும். மத்திய அரசு, வரி விதிப்பு மற்றும் நிதித்துறை சார்ந்த உயரிய அனுபவம் கொண்ட வல்லுநர்கள் இதில் இடம் பெற்றுள்ளது மாநிலத்தின் நிதித் தற்சார்பை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குழுவில் பொருளாதாரத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முதன்மை நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன், வரி கொள்கை நிபுணர் அரவிந்த் மோடி, முன்னாள் ஐஆர்எஸ் அலுவலர் நஜீப் ஷா, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ் பாபு ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை இணைச் செயலர் ராஜகோபால் சுங்கரா செயல்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பது, வருவாய் கசிவுகளைக் கண்டறிந்து தடுப்பது, வரி விலக்குகளை முறைப்படுத்துவது ஆகியவை இக்குழுவின் முக்கியப் பணிகளாகும். மேலும் டாஸ்மாக், பத்திரப்பதிவு, கனிம வளம், வணிக வரி மற்றும் போக்குவரத்து போன்ற அதிக வருவாய் ஈட்டும் துறைகளின் செயல்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, புதிய நிதி ஆதாரங்களைக் கண்டறிய தனித் தனித் துணைக் குழுக்களை அமைக்கும் அதிகாரமும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் அனைத்துத் துறைகளிடம் இருந்தும் தரவுகளைப் பெற்று ஆய்வு செய்யவுள்ள இக்குழு, அடுத்த 3 மாதங்களுக்குள் தன் விரிவான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும். இக்குழுவினர் அளிக்கும் அறிவியல் பூர்வமான பொருளாதார அறிக்கையானது, தமிழகத்தின் நிதி ஆதாரங்களை நிலையாக உயர்த்துவதோடு, மாநிலத்தின் எதிர்கால நிதி நிர்வாகத்திற்கு ஒரு புதிய வழிகாட்டியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
