புதுச்சேரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் நிலை எழுத்தர் தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நண்பர் மூலமாக அறிமுகமான புதுச்சேரி காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை அணுகியுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் காலியிடங்கள் இருப்பதாகவும், தனக்கு உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளதாகவும் கூறி அந்த அதிகாரி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பிய இளைஞர், வேலைக்காகக் கேட்கப்பட்ட ரூ.10 லட்சம் தொகையை அந்த சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியுடைய வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் வாயிலாக மூன்று தவணைகளாக அனுப்பியுள்ளார்.
ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாங்கித் தராமல் பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறி அந்த அதிகாரி காலத்தைக் கடத்தியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவரைச் சந்திக்காமல் தொலைபேசி அழைப்புகளையும் புறக்கணித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர், பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டு ஆதாரங்களுடன் புதுச்சேரி மாநில காவல் துறை தலைமை இயக்குநரிடம் நேரில் சென்று பரபரப்பு புகாரளித்துள்ளார். சட்டத்தைக் காக்க வேண்டிய அதிகாரியே பண மோசடியில் ஈடுபட்ட இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
