அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தைச் சேர்ந்த 43 வயது பிரபலமான டிக்டாக் பிரபலம் சாரா கில்சன், தனது பிரிந்து வாழும் கணவர் ஜெரிமியா “ஷான்” டஃபி என்பவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்குப் பயிற்சி அளிக்கும் கூடைப்பந்துப் பயிற்சியாளரான கணவர் டஃபி, சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, சாரா நீதிமன்றத்தை அணுகித் தன் கணவர் தன் அருகில் வரக் கூடாது என்பதற்கான அவசரப் பாதுகாப்பு ஆணையைப் பெற்றிருந்தார். பின்னர், தன் கணவர் ஒரு சிறுவர் பாலியல் குற்றவாளி என்ற அதிர்ச்சி தகவலை ஆவணப் படம் போன்ற பாணியில் டிக்டாக் தளத்தில் சாரா காணொளியாகப் பதிவிடவே, அது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே, ஜூலை 23 அன்று இரவு சாராவின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த டஃபி, அவரோடு தகராறில் ஈடுபட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் சாராவின் சிறு வயது மகன் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தான். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், தலையில் துப்பாக்கிக் காயங்களுடன் சாராவும் அவரது கணவர் டஃபியும் சடலமாகக் கிடப்பதைக் கண்டறிந்தனர்; விசாரணையில் சாராவைக் கொன்றுவிட்டு டஃபி தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உண்மையை தைரியமாக வெளிப்படுத்திய ஒரு பெண்ணிற்கு நேர்ந்த இந்த கோர முடிவுக்கு இணையத்தில் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், குடும்ப வன்முறைகளுக்கு எதிரான தங்களின் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
