“35 கோடி பேரம்.. 50 கேள்விகள்”….. “முடிவடைஞ்ச உடனே தரமான சம்பவம் இருக்கு”….. தவெக வழக்கு குறித்து செந்தில் பாலாஜி கொடுத்த அல்டிமேட் அப்டேட்….!

By Nanthini on ஆடி 26, 2026

Spread the love

தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு தொடர்பாக, விசாரணை முடிவடைந்த பின் செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கம் அளிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ‘மேகலாயா புராஜக்ட்’ என்ற பெயரில் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிய நிலையில், இதுவரை 14 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றனர். நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி, காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆஜராகி கையெழுத்திடவும், காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான சிறப்புப் படையினர், கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை முன்வைத்து செந்தில் பாலாஜியிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

   

இந்நிலையில், இந்த குதிரை பேர வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து இரண்டாவது நாளாக காவல் துறை விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் வழக்கு குறித்த கேள்விகளை எழுப்பியபோது, “விசாரணை தற்போது பாதியில் இருக்கிறது… முழுமையாக முடியட்டும், நிச்சயம் விரிவாகப் பேசுகிறேன்” என்று செந்தில் பாலாஜி பதிலளித்தார். விசாரணை நடக்கும் சூழலில் அவசரப்பட்டு கருத்து கூறாமல், சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்த பிறகு அனைத்திற்கும் பதில் அளிக்கப்படும் என்பதை அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

செந்தில் பாலாஜியின் இந்த சுருக்கமான ஆனால் உறுதியான பதில், திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போது பெரும் கவனத்தைப் பெற்று டிரெண்டாகி வருகிறது. வழக்கமாக தன் மீதோ அல்லது கட்சி மீதோ எந்த விமர்சனம் வந்தாலும், செய்தியாளர்களை உடனடியாகச் சந்தித்து ஆதாரங்களுடன் விளக்குவது செந்தில் பாலாஜியின் பாணியாகும். கரூர் விவகாரத்தின் போது கூட நீண்ட செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வீடியோ ஆதாரங்களுடன் விளக்கமளித்ததை நினைவு கூரும் ஆதரவாளர்கள், விசாரணை முடிந்தவுடன் அவர் அளிக்கும் விளக்கம் இந்த வழக்கின் உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.