“எனக்கே அப்புறம்தான் தெரியும்”…. 100 கோடி பழனி நில விவகாரத்தில் வெடித்த அமைச்சர் ரமேஷ்…. பின்னணியில் யார்?…. பரபரப்பு பேட்டி….!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

பழனியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நில விவகாரத்தில், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் வீண் பழிகள் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “பழனியில் அப்படி ஒரு இடம் இருப்பதும், அதன் மதிப்பு ₹100 கோடி என்பதும் இந்த வழக்கு வெளிவந்த பிறகுதான் எனக்கே தெரியும். எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அரசுக்கும் எனக்கும் அவப்பெயர் ஏற்படுத்த முயல்கின்றனர்” என்று கூறினார்.

நிலப் பத்திரப்பதிவு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜூலை 7-ஆம் தேதி நிலத்தின் பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாகவே (ஜூன் 30-ஆம் தேதி) இது தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறியவும், உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் இந்த வழக்கின் விசாரணையைச் சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று தாம் நேரடியாகவே முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், அதனடிப்படையில் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

   

தனது உறவினர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதால் இதன் பின்னணியில் தாம் இருப்பசியாகக் கூறுவது வழக்கமான அரசியல் நாடகம் என்று அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார். “இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் முதலமைச்சரின் பெயரையும், அரசின் நற்பெயரையும் கெடுக்க நினைக்காமல், மக்களுக்கு நல்லது செய்ய யோசித்தால் மக்கள் உங்களை மதிப்பார்கள்” என்று எதிர்க்கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

   

இதே சந்திப்பில், மாணவர்கள் முன்னெடுத்துள்ள நீட் தேர்வு தொடர்பான போராட்டங்கள் குறித்துப் பேசிய அவர், நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருப்பதாகத் தெரிவித்தார். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது என்றும், ஆனால் இந்த உணர்வுப்பூர்வமானப் போராட்டத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகச் சதி செய்ய நினைப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.