“தர்மேந்திர பிரதான் பாவம்.. பிரதமர் மோடி தான் உடனே ராஜினாமா செய்யணும்”…. வெடித்த திருமாவளவன்…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

தேசிய தேர்வு முகமை மூலம் இந்தியா முழுவதும் ஒரே தேர்வாக நடத்தப்படும் ‘நீட்’ முறையை கடுமையாக விமர்சித்துள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், இத்தேர்வு மாணவர்களின் 12-ஆம் வகுப்பு உழைப்பைப் பயனற்றதாக்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசுகளால் தேர்வுகளைச் சிறப்பாக நடத்த முடியும் எனக் குறிப்பிட்ட அவர், நீட் தேர்வுக்காக மாணவர்கள் பல மாதங்கள் கண்விழித்துப் படிக்கும் சூழலைப் பயன்படுத்தி, வினாத்தாள்களை முன்கூட்டியே கசியவிட்டு கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் அவலம் நடப்பதாகக் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தேர்வை, பாஜக அரசு ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பியதுடன், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பதே விசிகவின் ஒற்றை முழக்கம் என்றும் தெளிவுபடுத்தினார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கைகள் குறித்துப் பேசிய திருமாவளவன், தனிநபர்களை மட்டும் பதவி விலகச் சொல்வது எந்தவொரு முழுமையான நல்ல மாற்றத்தையும் தராது என்றார். “தர்மேந்திர பிரதான் பாவம்… ஒரு தனி நபரையோ அல்லது அதிகாரிகளையோ மாற்றுவதால் அமைப்பில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” என்று குறிப்பிட்ட அவர், தேர்வு முறையிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்யாமல் நபர்களை மட்டும் மாற்றுவது தீர்வாகாது எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் சுமார் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த ஒட்டுமொத்தக் கட்டமைப்புமே சீர்குலைந்து காணப்படுவதாக அவர் சாடினார்.

   

அமைப்பில் மாற்றம் வராதவரை அதிகாரிகளையோ அமைச்சர்களையோ மாற்றுவது பலனளிக்காது என்பதற்கு உதாரணமாக அம்பேத்கர் சிலை விவகாரத்தைக் குறிப்பிட்டார். “கடந்த ஆட்சியில் இருந்த காவல்துறையை மாற்றிவிட்டுப் புதிய காவல்துறையைக் கொண்டுவந்தாலும், அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தால் அவர்கள் தகரச் சீட் அடித்து மூடும் நிலையே தொடர்கிறது” என்றார். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மாறினாலும் நடைமுறையில் எந்த மாற்றமும் விளையவில்லை என்பதற்கு இதுவே சான்று என அவர் விளக்கினார்.

   

எனவே, கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் வரை மாற்றினால் ஒழிய இந்த ஓட்டை உடைசல்களை அடைக்க முடியாது என்றும், ஒரு சிலரை மட்டும் மாற்றுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்றும் அவர் வலியுறுத்தினார். நீட் தேர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலுமாக மாற வேண்டுமானால், அத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே வழி என்றார். மேலும், இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்றுத் தனிநபர் விலகலுக்குப் பதிலாக, பிரதமர் மோடி தலைமையிலான முழு அரசாங்கமுமே பதவி விலக வேண்டும் என்றும் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.