தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி/தேர்ச்சி) மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து 30.06.2026 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்தவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியாவார்கள். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 45 வயதிற்குள்ளும், இதரப் பிரிவினர் 40 வயதிற்குள்ளும் (30.09.2026 நிலவரப்படி) இருத்தல் அவசியமாகும். இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்விக்கு மாதந்தோறும் ரூ.200/-ம், தேர்ச்சிக்கு ரூ.300/-ம், மேல்நிலைக் கல்விக்கு ரூ.400/-ம், பட்டப்படிப்புக்கு ரூ.600/-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதனுடன், மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை ரூ.600/-ம், மேல்நிலைக் கல்விக்கு ரூ.750/-ம், பட்டப்படிப்புக்கு ரூ.1000/-ம் எனச் சிறப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான இளைஞர்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாகக் காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்புப் பதிவு ஒருபோதும் ரத்து செய்யப்படமாட்டாது என்பதால், தகுதியுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
