கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் விஜய்க்குப் போதிய விவரம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வியை முதலில் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றியது யார் என்பதை அவர் நினைவுகூர வேண்டும் என்றும், விஜய் விவரம் உள்ளவர் என்று தான் நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வரும் நிலையில், முடிந்துபோன ஒரு பிரச்சனையை மீண்டும் எழுப்புவது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சிக்கு இதைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களைத் ‘தேசத்துரோகிகள்’ என்று சாடினார். அந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குண்டர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்றும், பாலஸ்தீன நாட்டின் கொடியை ஏந்துபவர்களுக்கு இந்தியாவில் என்ன வேலை இருக்கிறது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னால் காங்கிரஸ் கட்சி நிற்கும் ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று விலக வேண்டியசிய அவசியமில்லை என்றும், தவறுகளுக்குக் காரணமான கீழ்மட்ட அதிகாரிகள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பாரதிய ஜனதாவின் கடமை என்றும், அதை அக்கட்சி சரியாகவே செய்து வருகிறது என்றும் கூறிய அவர், தற்போதைய காவல்துறை விஜயின் ஏவல் துறையாகச் செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
முக்கியமான மசோதாக்கள் கொண்டுவரப்படும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியினரும் அவர்களது கூட்டணிக் கட்சியினரும் இது போன்ற துரோகச் செயல்களில் ஈடுபடுவதாக நயினார் நாகேந்திரன் வன்மையாகக் கண்டித்தார். காங்கிரஸ் கட்சி இவ்வளவு கோழைத்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறிய அவர், இத்தகைய செயல்களுக்காகக் காங்கிரஸைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
