தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து, லஞ்சப் பிடியில் இருந்து மக்களை மீட்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உளவுத்துறையை நேரடியாகக் களமிறக்கியுள்ளது. அரசுச் சேவைகளைப் பெற யாருக்கும் லஞ்சமோ அல்லது கட்சி நிதியோ கொடுக்கத் தேவையில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள முதலமைச்சர், புகார்களைத் தெரிவிக்கப் பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் வரும் சாதாரண செய்தி கூட உடனடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதால், அரசுத் துறைகளில் லஞ்சப் பழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், கீழ்மட்டத்தில் ஊழலின் உருவம் புதிய வடிவங்களை எடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றன. கடந்த ஆட்சிக் காலங்களில் பெருந்தொகை கொடுத்துப் பணிமாறுதல் மற்றும் பதவிகளைப் பெற்ற உயர் அதிகாரிகள், தங்களின் அன்றைய செலவினங்களை ஈடுகட்டக் கீழ்நிலை ஊழியர்களுக்கு வரி வசூல் இலக்கு நிர்ணயித்து அழுத்தம் தருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஊழியர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற முயற்சி செய்து வருகின்றனர். மேலும், சோதனைகளில் சிக்காமல் இருக்க ரொக்கப் பணத்திற்குப் பதிலாக நகைக் கடைகளில் பயன்படுத்தக்கூடிய ‘கூப்பன்களை’ லஞ்சமாகப் பெறும் புதிய உத்திகளையும் சில அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர்.
குறிப்பாகப் பத்திரப்பதிவுத் துறை, மின்சார வாரியம், வருவாய்த்துறை, நில அளவைத் துறை, நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்னமும் லஞ்சக் கலாச்சாரம் முழுமையாக ஒழியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. முதலமைச்சர் அறிவித்த வாட்ஸ்அப் எண்ணிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் கெடுபிடிகளும், லஞ்சத்தைப் பெறுவதற்கான குறுக்கு வழிகளும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், மக்களின் புகார்களை அடிப்படையாகக் கொண்டு உளவுத்துறை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர அரசு உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி RDO, RTO, ஆட்சியர் அலுவலகங்கள், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் ரகசியப் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்து லஞ்ச அமைப்பை உருவாக்கிய அதிகாரிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உளவுத்துறை சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உடனடி இடமாறுதல்களும் துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளும் பாயக்கூடும் என்பதால், அரசு வட்டாரங்கள் கடும் பீதியில் உறைந்துபோயுள்ளன.
