தமிழ்நாடு அரசு முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டிருப்பதும், அதன் பயன்பாட்டை 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்திருப்பதும் தொலைநோக்கு பார்வைகொண்ட வரவேற்பிற்குரிய முடிவாகும். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து கல்விப் புரட்சிக்கு வித்திட்ட கர்மவீரர் காமராஜரின் நினைவைப் போற்றும் வகையில், காலை உணவுத் திட்டத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டிருப்பது வரலாற்றுப் பூர்வமாக மிகவும் பொருத்தமான கௌரவமாகும்.
பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்க வேண்டும் என்பதும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கி வருகைப்பதிவை அதிகரிக்க வேண்டும் என்பதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். தற்போது இந்த விரிவாக்கத்தின் மூலம் சுமார் 20.59 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பலனடைவதுடன், மேல்நிலைக் வகுப்புகளுக்குச் செல்லும் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியமும் கல்வித் தரமும் மேலும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.
