சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக தலைமை மீது மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இருப்பினும், திமுக தரப்பு அவரைப் பொருட்படுத்தாத நிலையிலும், அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் அதிமுக மற்றும் தவெக பக்கம் மெல்ல நகரத் தொடங்கினர். குறிப்பாக, மதுரை கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற்ற கார்த்திகேயனும் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தான். இந்தச் சூழலில் தான் கயல்விழியும் தவெக பக்கம் சாயும் முடிவுக்கு வந்தார். அதற்கேற்ப, முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதுடன், தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்களுடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் கயல்விழி விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்ற எதிர்பார்ப்பு தீவிரமடைந்தது.
ஆனால், தவெகவில் இணைவதற்கு முன்பாக கயல்விழி வைத்த மிகப்பெரிய ‘டிமாண்ட்’ அக்கட்சியின் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தான் கட்சியில் இணையும் பட்சத்தில், மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக குடும்பத்தின் முக்கிய வாரிசு ஒருவர் தவெகவில் இணைவது கட்சியின் பிம்பத்திற்குப் பலமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலேயே கயல்விழி மேயர் பதவியைக் கேட்டதை அக்கட்சியின் தலைவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் தலைவர் விஜய்யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
விஷயத்தைக் கேள்விப்பட்ட விஜய், “கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களுக்கே பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்; எந்தவித நிபந்தனையோ அல்லது உத்தரவாதமோ கொடுத்து யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டியதில்லை” என்று நேரடியாகவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்தத் தீர்க்கமான முடிவால் கயல்விழியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகிகள் பின்வாங்க, அழகிரி தரப்போ கடும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் கயல்விழிக்கு மேயர் பதவி கிடைப்பது மட்டுமின்றி, தவெகவில் இணைவதுமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மற்றொரு புறம், மதுரையின் புதிய ‘பவர் சென்டராக’ உருவெடுத்துள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மதுரை மாநகராட்சியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதற்காகத் திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளரான மருதுபாண்டியனை மேயர் வேட்பாளராக முன்னிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதபோதிலும் நிர்மல்குமாரின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைத்த மருதுபாண்டியன், தவெகவின் முக்கிய நிர்வாகிகளில் இன்னும் அரசியல் அதிகாரம் கிடைக்காமல் இருப்பவர். எனவே, கயல்விழியை ஒதுக்கிவிட்டு மருதுபாண்டியனைக் கொண்டுவர நிர்மல்குமார் தரப்பு காய்நகர்த்தி வருகிறது. இதன்மூலம், கயல்விழி வைத்த மேயர் டிமாண்டே அவருக்குப் பெரும் பின்னடைவாகத் திரும்பிவிட்டது.
