தமிழக அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும் ‘வெற்றி தொழிற்சங்க பேரவை’ என்னும் புதிய அமைப்பைத் தொடங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகளை நிறைவுசெய்துள்ளார். தவெகவில் பல்வேறு சார்பு அணிகள் ஏற்கனவே தீவிரமாக இயங்கி வரும் நிலையில், மிக முக்கியத் தேவையான தொழிற்சங்க பேரவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது. தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் குரலாக எதிரொலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியல் மற்றும் தொழிலாளர் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களில் பொதுச்செயலாளர் பதவிக்கே முதன்மை அதிகாரமும் முக்கியத்துவமும் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், தவெகவின் கட்சி விதிகளில் (Bylaws) சில சுவாரசியமான மாற்றங்களைச் செய்து, இந்த அமைப்பில் தொழிற்சங்கத்தின் ‘தலைவருக்கே’ அதிகப்படியான அதிகாரங்களை வழங்கி விஜய் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். தலைவருக்கு அடுத்தபடியாகவே தொழிற்சங்கச் செயலாளர் பதவி அதிகாரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிகாரப் பகிர்வு தவெகவின் தொழிற்சங்க அமைப்பை மற்றக் கட்சிகளின் அமைப்புகளில் இருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
இந்த புதிய வெற்றி தொழிற்சங்க பேரவையின் தலைவராகக் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தவெகவின் முக்கிய நிர்வாகி பரணி பாலாஜி நியமிக்கப்படவுள்ளதாகவும், செயலாளராகக் கமலக்கண்ணன் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தில் பல ஆண்டுகள் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி, தொழிற்சங்க நுணுக்கங்களை முழுமையாக அறிந்த அனுபவமிக்கவரான கமலக்கண்ணன், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த பிறகு மாநில அளவிலான முக்கியப் பதவியைப் பெறப்போகும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவமும் ஆற்றலும் கொண்ட நிர்வாகிகளுடன் களம் காணும் ‘வெற்றி தொழிற்சங்க பேரவை’, தொழிலாளர்கள் மத்தியில் தவெகவின் செல்வாக்கை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
