மத்தியப் பிரதேச மாநிலம் டிகாம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னே புஜுர்க் கிராமத்தில், பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், குழந்தையைக் கவனித்துக் கொள்வதாகக் கூறிச் சென்ற பாட்டி, தனியாக அழைத்துச் சென்று இக்கொடூரத்தைச் செய்துள்ளார். குழந்தை அசைவற்று இருந்ததைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் இது இயல்பான மரணம் எனக் கருதப்பட்டாலும், உடற்கூறாய்வு ஆய்வில் குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருந்தது தெரியவந்ததால் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில் குடும்பத்தின் மூத்த பெண்ணான பாட்டிக்கு ஆண் பேரன் வேண்டும் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருந்ததும், பெண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட ஏமாற்றமே இக்கொலைக்குக் காரணம் என்பதும் அம்பலமானது. இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தப் பாட்டியைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
