நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் சூழலில், சென்னை தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறள்’ அறிவைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து வேனில் ஏற்றினர். இக்கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக எழும் மக்களின் குரல்களை அரசு கேட்க வேண்டுமே தவிர அடக்கக் கூடாது என்றும், தமிழக அரசின் நடவடிக்கை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பாடகர் அறிவு நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பிற்குப் பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பாடகர் அறிவின் தோள் மீது கைபோட்டு, அன்போடு கைகுலுக்கித் தனது காரிலேயே வழியனுப்பி வைத்தார். அங்குத் திரண்டிருந்த செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோதிலும், பாடகர் அறிவு எவ்வித பதிலையும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
