தமிழகத்தில் தவெக அரசு அமைந்தது முதலே திமுகவினர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசிய வழக்கில் விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் கைதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது உடல்நிலையைக் காரணம் காட்டி காவல்துறையினரிடம் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சண்முக விலாச மண்டபத்தில் அமைக்கப்பட்ட இரும்பு கிரில் கேட்டை அகற்றக் கோரி, ஜூலை 22-ஆம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் 5,000 பக்தர்களுடன் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தப் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்றே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகப் பேசப்படுகிறது. மார்க்கண்டேயன் கைதைத் தொடர்ந்து, தங்கள் மீதும் அடுத்தகட்டக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அனிதா ராதாகிருஷ்ணன் இந்த போராட்ட முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
