தமிழ் திரையுலகில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘மைதிலி என்னை காதலி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா. தொடர்ந்து ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘பன்னீர் நதிகள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பன்மொழித் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே, கடந்த 1992-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அவர், சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்தார். பின்னர், சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு ‘கணம்’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பெரிய கூட்டுக் குடும்பம் மற்றும் கணவர் நாகார்ஜுனாவின் அக்கறை குறித்து அமலா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சுமார் 25 பேர் கொண்ட தங்களது குடும்பத்தில், பிள்ளைகளின் விருப்பத்திற்காக டைனிங் டேபிளில் 8 முதல் 9 வகையான அசைவ உணவுகள் நிறைந்திருக்குமாம். எளிமையை விரும்பிய மாமனார் நாகேஸ்வர ராவ் மற்றும் பிள்ளைகளின் ஆசைக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைக்கும் மாமியார் ஆகியோருக்கு மத்தியில், தான் ஒரு சைவ உணவுப்பிரியர் (Vegetarian) என்பதால் கணவர் நாகார்ஜுனா தன் மீது காட்டும் தனி அக்கறையைக் குறிப்பிட்டுள்ளார். “அமலா பக்கத்தில் அசைவப் பாத்திரங்களை வைக்காதீர்கள்” என்று கூறி, தனக்கு எந்தவொரு சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாகார்ஜுனா எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார் எனத் தன் கணவரின் மாறாத காதல் குறித்து அமலா பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
