தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்த டிஸ்கோ சாந்தி, திருமணத்திற்குப் பிறகு கடந்த 28 ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும் ‘புல்லட்’ என்ற பான்-இண்டியா திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். அமானுஷ்ய கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் அவர் குறி சொல்லும் பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேமரா முன் வந்துள்ள டிஸ்கோ சாந்தி, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியில் தனது மறைந்த கணவரும், பிரபல நடிகருமான ஸ்ரீஹரி குறித்து மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். “என் கணவர் ஸ்ரீஹரியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் மாரடைப்பால் இறந்த பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தேன், அந்த இழப்பில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை” என்று கலங்கியுள்ளார். கணவர் மற்றும் குழந்தைகள் தான் தன் உலகம் என்று வாழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், கணவர் படப்பிடிப்புக்குச் சென்றால் கூட சமைத்து எடுத்துக்கொண்டு அவருடன்தான் சாப்பிடுவேன் என்றும், தான் கேட்ட அனைத்தையும் தனது ‘பாவா’ (ஸ்ரீஹரி) அன்போடு வாங்கிக் கொடுத்தார் என்றும் அவரது பாச நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
தொடர்ந்து பேசிய டிஸ்கோ சாந்தி, தனது சினிமா பயணத்தில் எதிர்கொண்ட கசப்பான ‘அட்ஜஸ்ட்மென்ட்’ அனுபவம் குறித்தும், அதற்கு தான் கொடுத்த அதிரடி பதிலடி குறித்தும் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தி படம் ஒன்றில் பணியாற்றிய போது ராஜாராம் என்ற இயக்குநர் தனக்குத் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்ததாகவும், தப்பான எண்ணத்தோடு பழக முயன்றதாகவும் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அவரது அத்துமீறல் அதிகமானதால், ஒரு நாள் அவரை நேரில் வரவழைத்து, தான் அணிந்திருந்த பெரிய ஹீல்ஸ் செருப்பாலேயே எட்டி மிதித்ததாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு ஆணும் தன்னிடம் தவறாகப் பேசவே பயந்தார்கள் என்று திரையுலகின் இருண்ட பக்கத்தை தைரியமாக உடைத்துப் பேசியுள்ளார் நடிகை டிஸ்கோ சாந்தி.
