கூலிப்படை ஏவி கொலை… கள்ளக்காதலுக்கு தடையா இருந்த கணவன்… ஓடும் ரயிலில் நடந்த கொடூர சம்பவம்… அரசு பெண் அதிகாரி உட்பட 3 பேர் அதிரடி கைது…!

By Visaka on ஆடி 18, 2026

Spread the love

பீகார் மாநிலம் ககாரியாவில் ஓடும் ரயிலில் துப்பாக்கியால் சுடப்பட்டு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநர் தேவ் குமார் குஞ்சன் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை ஏதோ கொள்ளை கும்பல் செய்ததாக அவரது மனைவி நாடகமாடிய நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த கொடூரக் கொலைக்குப் பின்னால் தேவ் குமாரின் மனைவியும், சுபெளல் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் அரசு பெண் அதிகாரியுமான ஸ்மிதா குமாரி மாஸ்டர் ஸ்கெட்ச் போட்டுச் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் ஒன்றாகப் பணியில் சேர்ந்தபோது ஸ்மிதா குமாரிக்கும், அஜீத் குமார் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே 2018-ல் ஸ்மிதாவிற்கும் தேவ் குமாரிற்கும் திருமணம் நடந்து, 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 2023-ல் ஸ்மிதா மோட்டார் வாகன ஆய்வாளராக உயர் பதவி பெற்றுச் சென்ற பிறகும் அஜீத்துடனான கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது. இந்த விவகாரம் கணவர் தேவ் குமாருக்குத் தெரியவரவே, அவர் ஸ்மிதாவைக் கண்டித்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த கள்ளக்காதல் ஜோடி, தீரஜ் என்ற கூலிப்படை கொலையாளியை 4 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, கடந்த 11-ஆம் தேதி ரயிலில் பயணித்த தேவ் குமாரைச் சுட்டுக் கொன்றுள்ளது.

   

ரயிலில் கொள்ளையடிக்க வந்த கும்பல்தான் தன் கணவரைக் கொன்றதாக ஸ்மிதா போலீசாரிடம் கதறி அழுது நாடகமாடினார். ஆனால், சம்பவ இடத்தில் கிடைத்த அறிவியல் பூர்வமான தடயங்கள் மற்றும் செல்போன் அழைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்திய சிறப்புப் படை போலீசார் ஸ்மிதாவின் சதியை அம்பலப்படுத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஸ்மிதா குமாரி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அரசு பெண் அதிகாரி ஸ்மிதா குமாரி, அவரது கள்ளக்காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி தீரஜ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.