அமெரிக்காவின் தொடர் ராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நாடு சவுதி அரேபியா, குவைத், ஈராக் உள்ளிட்ட அண்டை நாடுகள் மீது மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அணு ஆயுதக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தொடுத்த போரில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் முதலில் தாக்குதல் நடத்தியதுடன், முக்கிய கச்சா எண்ணெய் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையையும் மூடியது.
இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஈரானைத் தாக்கப் போவதாக அறிவித்தது. தற்போது இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கி வரும் நிலையில், சுமார் 4 மாத இடைவெளிக்குப் பிறகு சவுதி அரேபியா மீது ஈரான் நேரடியாகத் தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா மட்டுமன்றி குவைத், பஹ்ரைன், ஈராக், ஜோர்டான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் மீதும் ஈரான் தனது ராணுவத் தாக்குதல்களைக் கடுமையாக்கியுள்ளது. இந்த திடீர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தற்போது கடுமையான பயமும் பீதியும் நிலவி வருகிறது.
