நம்முடைய வீடு, சமையலறை, தோட்டம் என நாம் கால் வைக்கும் இடமெல்லாம் எறும்புகளின் ராஜ்ஜியத்தைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த உலகிலேயே ஒரு எறும்பு கூட இல்லாத விசித்திரமான இடம் ஒன்று இருக்கிறது; அதுதான் உலகின் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்டிகா. பனியால் முழுமையாக மூடப்பட்ட இந்த கண்டத்தில், வெப்பநிலை எப்போதும் பூஜ்ஜியத்திற்கும் கீழே உறைந்து போயிருக்கும். எறும்புகள் போன்ற சிறிய பூச்சிகள் உயிர்வாழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பமும், சாதகமான சூழலும் தேவை. அண்டார்டிகாவின் கடுமையான குளிர்காற்று மற்றும் உறைபனி காரணமாக, எறும்புகளால் தங்கள் உடலின் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் அவற்றின் இயக்கம் முற்றிலும் முடங்கிவிடுகிறது.
பொதுவாக எறும்புகள் நிலத்திற்கு அடியிலோ, பாறைகளின் கீழ் அல்லது மரப்பட்டைகளுக்குள்ளோ கூடு கட்டி வாழும் இயல்புடையவை. ஆனால், அண்டார்டிகாவின் தரைப்பகுதி எப்போதுமே உறைந்து போயிருப்பதால் , எறும்புகளால் அங்கு குழி தோண்டவோ, கூடு கட்டவோ முடிவதில்லை. உணவு தேட முடியாத சூழல், கடுமையான காலநிலை மற்றும் இனப்பெருக்கம் செய்ய இயலாமை போன்ற காரணங்களால் அண்டார்டிகா எறும்புகள் வாழத் தகுதியற்ற இடமாக உள்ளது. பூமியில் ஒவ்வொரு உயிரினமும் வாழ்வதற்குச் சூழலியல் காரணிகள் எவ்வளவு முக்கியம் என்பதற்கு அண்டார்டிகாவில் எறும்புகள் இல்லாததே ஒரு சிறந்த உதாரணமாகும்.
