சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை வீழ்த்தி, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், திமுகவினர் மற்றும் முதலமைச்சர் விஜய் இடையேயான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே விஜய்யை ஒருமையில் பேசி காவல்துறை வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது மீண்டும் தூத்துக்குடி பொதுக்கூட்டம் ஒன்றில் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டும், ஒருமையில் விமர்சித்தும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் நடந்து வரும் நிலையில், திமுகவின் இந்த தொடர் விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
தூத்துக்குடி நிகழ்ச்சியில் காரசாரமாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், கொளத்தூரில் விஜய் பேசியதைச் சுட்டிக்காட்டி அவரது அரசியல் முதிர்ச்சியை மிகக் கடுமையாகச் சாடினார். “தேர்தலில் வெற்றி பெற மாதா கோயிலில் முட்டி போட்டவர், தேர்தல் முடிந்ததும் திருச்செந்தூரில் வேல் ஏந்தி நிற்கிறார். எம்.ஜி.ஆரைப் போல மைசூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வாள் கொடுக்கிறார். ஆனால், ஏழை எளிய மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அள்ளிக் கொடுத்த எம்.ஜி.ஆருடன் இவரை எப்படி ஒப்பிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “யாரும் தவறாக நினைக்க வேண்டாம், நான் த்ரிஷாவைச் சொல்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், விஜய் பெண்களுக்கு என்ன செய்துவிட்டார் என்றும், சினிமாவில் ஆட்டம் போட்டுவிட்டு, எழுதித் கொடுத்ததை மட்டுமே மேடைகளில் பேசி சைகை காட்டுகிறார் என்றும் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
மறுபுறம், தவெக அரசு மீது சுமத்தப்படும் ‘குதிரை பேரம்’ புகார்களையும் அவர் மேடையில் பகிரங்கப்படுத்தினார். அதிமுகவைச் சேர்ந்த 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து, அவர்களைப் பதவி விலகச் செய்து, தவெகவில் பண பலத்தால் இணைக்கப் பார்ப்பது யார் என்று கேள்வி எழுப்பிய அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய அரசியல் சூழலில் குதிரை பேரம் நடத்துவது திமுக அல்ல, தவெக தான் என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் விஜய்யை குறிவைத்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள இந்த அவதூறான பேச்சு, தவெக தொண்டர்கள் மற்றும் முற்போக்கு அரசியல்வாதிகள் மத்தியில் தற்பொழுது கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
