திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிட வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் த.வெ.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செப்டம்பர் 15 அன்று திருச்சியில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த அவர், வைகோ திராவிட இயக்கக் கொள்கையிலிருந்து விலகி தடம் மாறிவிட்டதாகவும், மதிமுக தற்போது ஒரு திரிபுவாத இயக்கமாக மாறிவிட்டதாகவும் சாடினார். மேலும், தனது மகன் துரை வைகோவின் அரசியல் எதிர்காலத்திற்காக வைகோ தங்கள் மீது துரோகப் பழியைச் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட மல்லை சத்யா, வரும் நாட்களில் மதிமுகவும் காலப்போக்கில் காணாமல் போன கட்சிகளைப் போல அழிந்துவிடும் என்று எச்சரித்தார்.
பாஜக மற்றும் த.வெ.க ஆகிய இரு கட்சிகளையும் இணைப்பதற்கான இடைத்தரகர் பணியை வைகோ செய்து வருகிறார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் மல்லை சத்யா முன்வைத்தார். சென்னையில் வைகோவின் நாடாளுமன்றப் பேச்சுப் புத்தகம் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், அதனை மீண்டும் வெளியிடுவதன் பின்னணியில் இந்த அரசியல் இணைப்புக்கான முயற்சி நடப்பதாக அவர் சாடினார். நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் தோல்வியே இந்த முடிவுக்குக் காரணம் என்றும், திமுக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் வைகோ அக்கட்சியை விட்டு விலகி இருக்க மாட்டார் என்றும், திருச்சியில் துரை வைகோ போட்டியிட ஸ்டாலின் தான் ராகுல் காந்தியிடம் பேசி சீட் வாங்கித் தந்தார் என்றும் கூறி, வைகோவின் தற்போதைய செயல்பாடுகளை விமர்சித்தார்.
தொடர்ந்து த.வெ.க அரசின் செயல்பாடுகளை விமர்சித்த மல்லை சத்யா, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதுபானக் கடைகளை மூடுவதற்குப் பதிலாக ‘ரெஸ்ட்ரோ பார்’ திறக்க முயல்வது சரியல்ல என்றும், இதற்கு வைகோவும் துரை வைகோவும் விஜய் ரசிகர் மன்றத் தலைவர்கள் போல ஆதரவு தெரிவிக்கக் கூடும் என்றும் கூறினார். சிறந்த திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போன்றவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், அரசை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதைப் பார்க்கும்போது த.வெ.க அரசு ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி பாசிசப் பாதையை நோக்கிச் செல்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சாட்டினார்.
