பேய் வசித்த குகை…? வரலாற்றுச் சிறப்புமிக்க “ஜெகன்மோகினி குகை…” ஆர்வமுடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள்… திகில் பயணம்…!!

By Devi Ramu on ஆடி 17, 2026

Spread the love

தருமபுரி மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் மக்கள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வதுடன், சுடச்சுட ஆற்று மீன் சமையலை ருசிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது கோடைக் காலம் என்பதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்து, விநாடிக்கு 1000 கன அடியாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, எப்போதும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜெகன்மோகினி குகை’ தற்போது முழுமையாக வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான பிரபல ‘ஜெகன்மோகினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பாறையைக் குடைந்து, பேய் வசிக்கும் குகை போன்ற வினோத தோற்றத்தில் இது உருவாக்கப்பட்டது. ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் போது மூழ்கிவிடும் இந்தக் குகை, தற்போது வறட்சி காரணமாகப் பாறைகள் தென்படுவதால் பரிசல் ஓட்டிகள் மூலம் பயணிகளுக்குக் காண்பிக்கப்பட்டு வருகிறது. சுமார் 10 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடிய இந்தக் குகைக்குள் ஆர்வமுடன் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பழைய திரைப்படக் காட்சிகளை அசைபோட்டபடி புகைப்படங்கள் எடுத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.