திமுக நிர்வாகி பரந்தாமன், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பழனி மலையடிவாரத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த நிலத்தை வாங்குவதற்குக் கட்டப்பட்ட ரூ 15 லட்சம் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தும் அளவுக்கு, சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்கும் பொருளாதார வசதி இல்லை என்றும், இதனால் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் பேசுபவர்களை இரவோடு இரவாகக் கைது செய்யும் இந்த அரசு, இந்த நில மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளரையோ அல்லது அதிகாரிகளையோ குற்றவாளியாகச் சேர்க்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலப் பதிவின் போது அடுத்தடுத்து நடந்த சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளைப் பட்டியலிட்ட அவர், கடந்த ஜூலை 2-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது எனப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சார்பதிவாளர் பழனிசாமி அதை மறுத்ததாகக் கூறினார். அடுத்த நாளான ஜூலை 3-ஆம் தேதி தற்காலிகப் பணிக்கு வந்த பாலசுந்தரம் என்பவரும் நிலத்தைப் பதிவு செய்ய மறுத்து விடுப்பில் சென்றார். அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் திங்கள்கிழமை அன்று பழனி அலுவலக அதிகாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதாக விவரித்தார்.
அதிகாரிகள் விடுப்பில் சென்றபோது, வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்திரப்பட்டி அல்லது கீரனூர் அலுவலக அதிகாரிகளை அழைக்காமல், 60 கி.மீ. தூரத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து பத்திரப்பதிவுக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவரை அழைத்து வந்து அவசரமாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் பரந்தாமன் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோரின் கருத்துகள் முரண்பாடாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்த 100 கோடி ரூபாய் நில மோசடி விவகாரம் முதல்வர் விஜய்க்குத் தெரிந்துதான் நடந்துள்ளது என்றும், ஒருவேளை அவருக்குத் தெரியவில்லை என்றால் அவர் நேரில் வந்து விளக்கமளிக்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
