விஜய் பெயரைக் கெடுத்த தவெக நிர்வாகி.. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிரடி ட்விஸ்ட்…. இரவோடு இரவாக தூக்கிய போலீஸ்….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமாக இருந்த வீராசாமி, சாலை ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மாம்பாக்கம் பகுதியில் 9.80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைத்த நவீன் என்ற அரசு ஒப்பந்ததாரரிடம், அதற்கான பில் தொகையை ரிலீஸ் செய்ய வீராசாமி 1.30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் தரப்பில் பணம் கொடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தவெக தலைமையால் அவர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையின் வாட்ஸ்அப் உதவி எண்களை வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே தாம்பரம் காவல்துறையினர் வீராசாமியை அதிரடியாகக் கைது செய்தனர்.

“ஊழல் செய்தால் விட மாட்டோம்! உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தரமாட்டோம் என்று தைரியமாகச் சொல்லுங்கள், என் பெயரைச் சொல்லுங்கள்” என்று தவெக தலைவர் விஜய் அண்மையில் தொண்டர்களிடம் பேசியிருந்தார். கட்சித் தலைவரின் இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரே லஞ்சப் புகாரில் சிக்கி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது போலீசாரால் தட்டித் தூக்கப்பட்டிருப்பது தவெக வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. கட்சியின் “தூய சக்தி” என்ற பிம்பத்திற்கு இத்தகைய சம்பவங்கள் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் விஜய் உஷாராக இருக்க வேண்டும் என்றும், கட்சிக்குள்ளேயே அடுத்தடுத்து வரும் இந்த பஞ்சாயத்துகள் தவெகவினரிடையே தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.