கேரள உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியைப் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றிய நிலையில், அங்கு வென்ற 20 கவுன்சிலர்கள் விதிகளுக்குப் புறம்பாக உள்ளூர் தெய்வங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர்களில் பதவியேற்றதால் அவர்களின் பதவி செல்லாது என்றும், மீண்டும் அவர்கள் முறைப்படி உறுதியேற்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு மறுபடியும் பதவியேற்க வேண்டியவர்களில் சுகதன் என்ற கவுன்சிலரும் ஒருவர் ஆவார். இவர் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த போதிலும், கேரள சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது வியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் சுகதன் அங்கிருந்தபடியே பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் பிரத்தியேக அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, திருவனந்தபுரம் மேயர் ராஜேஷ் நேராகச் சிறைச்சாலைக்குச் சென்று, அங்குள்ள நூலகத்தில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சுகதனுக்குக் கடவுளின் பெயரால் புதிய பதவிப்பிரமாணத்தை முறைப்படி செய்து வைத்தார். கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே சிறை வளாகத்திற்குள் மக்கள் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டது இதுவே முதன்முறையாகும்.
