தமிழகத்தில் தவெக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்புவகிக்கும் ரமேஷ் மீது, பழநி கோயிலுக்குச் சொந்தமான பெருமதிப்புள்ள நிலத்தை அவரது உறவினர்கள் முறைகேடாகப் பத்திரம் பதிவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்பொழுது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள அமைச்சர் தரப்பு, தன் மீது வன்மத்துடன் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்குப் பத்திரம் பதிவு செய்து மிகப் பெரிய பகல் கொள்ளை அரங்கேறியுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இந்த முறைகேடான பத்திரப் பதிவை நடத்துவதற்காகவே ஒரு குறிப்பிட்ட சார்பதிவாளரை அவசர அவசரமாக அந்த இடத்திற்குப் பணிமாற்றம் செய்து, மற்ற அதிகாரிகளை அன்றைய தினம் விடுப்பில் செல்ல வைத்துள்ளனர் என்றும், வேலை முடிந்த அடுத்த நாளே அந்தப் பதிவாளரை வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளனர் என்றும் திமுக அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. மேடைக்கு மேடை நேர்மை பேசும் முதலமைச்சர் விஜய், தன் கண் முன்னரே நடைபெறும் இத்தகைய இமாலய ஊழல் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக, மக்களின் சொத்துகளையும் நிதியையும் பாதுகாக்கத் தவறிய அமைச்சர் ரமேஷ் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்று ஆவேசமாக வலியுறுத்தியுள்ளது.
