“கை குடுங்க பாஸ்.. இனிமே நாம ப்ரண்ட்ஸ்”… திமுக மாஜிக்களை லெஃப்ட் & ரைட் வாங்கிய விஜய்… தவெக மா.செ.க்களை நெருங்கும் கூட்டம்… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

தமிழக அரசியலில், குறிப்பாக திமுக வட்டாரங்களில், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கரூர் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரித்துள்ள நிலையில், சில முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் இது கடுமையான கலக்கத்தை உருவாக்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியடைந்தார். மேலும், 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் படுதோல்வியைச் சந்தித்த சூழலில், புதிய அரசாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், திமுகவின் ஊழல் புகார்கள் குறித்து தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; வரும் நாட்களில் தவெக-வின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்” என்று அதிரடியாகப் பேசினார். மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘கரூர் கம்பெனி முதலாளி’ என மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் என்றும், மற்றொரு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரில் ஒளிந்திருக்கிறார் என்றும் அவர் சாடியது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியும், நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகாரில் எ.வ.வேலுவும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை எதிர்கொண்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அவர்கள் இருவரையும் குறிவைத்தே அமைந்திருந்தது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

   

இதேபோல், முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இந்த விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் தற்போது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதால், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அடுத்தடுத்து அதிரடி சோதனைகளும், வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர்கள் கைதும் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால், சட்டரீதியான சவால்களை எதிர்கொள்வது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை கையாளுவது மற்றும் முன்ஜாமீன் பெறுவது குறித்து திமுகவின் முக்கியப் புள்ளிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

   

இந்தச் சூழலில், தங்களைச் சுற்றியுள்ள சட்ட நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க சில முன்னாள் திமுக அமைச்சர்கள் ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் தங்களுக்கு நெருக்கமாக இருந்த, தற்போது தவெக மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் நபர்களுடன் அவர்கள் மீண்டும் நட்புறவைத் தொடங்கியுள்ளனர். தவெக நிர்வாகிகள் முன்னதாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தபோது செய்த உதவிகளை நினைவூட்டி, அவர்கள் மூலமாக விஜய் அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன? தங்கள் மீதான வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? என்பது போன்ற ரகசியத் தகவல்களைத் திரட்டவும், தங்களைக் காத்துக் கொள்ளும் வழிகளைத் தேடவும் முன்னாள் அமைச்சர்கள் முயன்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.