ஸ்டாலினுக்கு காலையிலேயே ஷாக்… அடுத்தடுத்து சிக்கும் திமுக புள்ளிகள்…. தா.மோ.அன்பரசன் மீது பாய்ந்த அதிரடிப் புகார்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக வாடகைக்கு பெறப்பட்ட நிலத்தை, ஒப்பந்த காலம் முடிந்தும் திருப்பித் தராமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அவர் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த புதிய குற்றச்சாட்டு திமுகவிற்கு கூடுதல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்துள்ள புகாரின்படி, கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பரங்கிமலைப் பகுதியில் தேர்தல் பணிமனை அமைப்பதற்காக அவரது 5,500 சதுர அடி நிலம் கேட்கப்பட்டுள்ளது. அன்பரசனின் உதவியாளர் எனக் கூறி வந்த நபரின் பெயரில், கட்டாயத்தின் பேரில் 6 மாத கால குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் இடத்தை காலி செய்யாமலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய வாடகைத் தொகையை வழங்காமலும் முறைகேடு செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

   

மேலும், இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் அனைத்தும் போலியானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நில உரிமையாளர் ராஜேஷ், கடந்த ஜூன் 19ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசனை நேரடியாகச் சந்தித்து முறையிட்டபோது, நிலத்தை தமக்கே விற்றுவிடுமாறும் அதற்கான தொகையைத் தந்துவிடுவதாகவும் அன்பரசன் கூறியுள்ளார். எனினும், நிலத்தை விற்க விருப்பமில்லை என்று மறுத்துவிட்ட ராஜேஷ், தனது வாழ்வாதார நிலத்தை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத் தருமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவை நாடியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விரைவில் தீவிர விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதலே, திமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி, எ.வ. வேலு மற்றும் சிவசங்கர் ஆகியோர் முறையே ஊழல், மோசடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் கீழ் சிக்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது தா.மோ.அன்பரசன் மீதும் நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளதால், குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வமாக நிரூபித்து திமுகவிற்கு அரசியல் ரீதியான நெருக்கடியை அதிகரிக்க ஆளும்தரப்பு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.