அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் மற்றும் அனுமதியின்றி எவ்வித கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என கட்சித் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமையின் முறையான அனுமதி பெறாமல் சில இடங்களில் தன்னிச்சையாக கட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு வந்ததை அடுத்து இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளைஞர்களை இணைய வழியில் ஒன்றிணைத்து கட்சியைப் பலப்படுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய இணையவழி படிவம் வெளியிடப்பட உள்ளதாகவும், அந்தப் பணிகள் நிறைவடைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, அவரது நேரடி ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கூட்டமோ அல்லது நிகழ்ச்சியோ நடத்தப்படக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
